அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள்: பிரதமர் மோடி

பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றார்கள்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள்: பிரதமர் மோடி

அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தார்.

பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சரத்குமார், ஓ. பன்னீர்செல்வம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்றார்கள்.

பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதாவது:

"பாரத அன்னை வாழ்க! என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்!

இந்தப் புண்ணிய பூமியில் உள்ள கோட்டை மாரியம்மனை வணங்கி உரையைத் தொடங்குகிறேன்.

தமிழகத்தில் தற்போது பாஜகவுக்கும் எனக்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய மக்கள் ஆதரவை இந்திய நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. இதுதான் நாடு முழுக்க பேச்சாக உள்ளது. நேற்று கோவையில் மக்கள் மத்தியில் பேரணி மேற்கொண்டேன்.

தமிழகத்தில் மோடி ஆகிய எனக்கும், பாஜகவுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டது.

தமிழ்நாடு மக்கள் ஒரு முடிவை செய்துவிட்டார்கள். ஏப்ரல் 19-ல் விழும் ஒவ்வொரு வாக்கும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். தமிழ் மக்களின் இந்த உறுதியான முடிவால் வெற்றியின் எண்ணிக்கை 400-ஐ தாண்டும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டுக்கு, நவீன கட்டமைப்புக்கு, மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை உருவாக்க, பாரதம் தன்னிறைவைப் பெற, விவசாயிகள் நலனுக்கு, மீனவர்கள் பாதுகாப்புக்கு 400-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற வேண்டும். இம்முறை 400-க்கு மேல்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக உருவாகி இருக்கிறது. பாமக தலைவர்கள் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய சம்மதித்துள்ளார்கள். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் திறமை, ஆற்றல், தொலைநோக்கு இவற்றையெல்லாம் வைத்து தமிழகத்தைப் புதிய உயரத்துக்குக் கொண்டுசெல்ல ஓர் உத்வேகம் கிடைத்துள்ளது. பாமக தலைவர்களையும், தொண்டர்களையும் வருக வருக என வரவேற்கிறேன்.

நான் பலமுறை சேலம் வந்துள்ளேன். இந்த முறை சேலம் வந்தபோது, பழைய நினைவுகள் சேர்ந்து வருகிறது. 40, 50 வருடங்களுக்கு முன்பு கைலாசத்துக்கு யாத்திரை சென்றபோது, என்னுடன் ஒரு பெரிய குழு வந்திருந்தது. அந்தக் குழுவில் ஓர் இளைஞர் இருந்தார். ரத்னவேல் என்ற அந்த இளைஞர் இந்த ஊரைச் சேர்ந்தவர். சேலம் வந்தவுடன் அவர் என் நினைவுக்கு வருகிறார்.

அவர் என்னுடன் வந்தபோது ஊரைப் பற்றிய சேலத்தின் பெருமைகள், நல்ல விஷயங்கள் உள்ளிட்டை குறித்து நிறைய சொன்னார். அப்போதிலிருந்து சேலம் மீது எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உருவானது. அவர் திரும்பி வந்து உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். துரதிருஷ்டவசமாக அவர் தற்போது இல்லை. விபத்தில் உயிரிழந்துவிட்டார். சேலத்தில் கால்பதித்தவுடன் அவருடைய நினைவு எனக்கு வந்தது.

சேலத்தில் கால் பதித்தவுடன் என்னுடைய நெருங்கிய நினைவுகள், நண்பர்கள் குறித்து யோசிக்கும்போது கே.என். லக்‌ஷ்மனனை நினைவுகூர்கிறேன். தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்காகத் தொடக்க காலத்தில் பாடுபட்ட மிக அற்புதமான மனிதர். அவசர நிலை காலத்தில்கூட பல தடைகளை மீறி கட்சியை வளர்க்க பாடுபட்டவர். பல பள்ளிகளை நடத்தியவர். இப்படி என் நினைவலைகள் சுழலும்போது, இன்று நான் சேலத்தில் கால்பதித்ததும், எனக்கு அதிகமாக நினைவு உறுத்திய ஒரு செய்தி சேலம் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் நினைவு. கட்சிக்காக தன் உயிரைத் தியாகம் செய்து உழைத்த மனிதரை நினைவுகூர்கிறேன். கட்சிக்காக உழைத்தவரை சமூக துரோகிகள் கொலை செய்துவிட்டார்கள். அந்த நேர்மையாளரை இந்த மண்ணில் நினைத்து இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறேன்.

இங்குள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ஓம் சக்தி என்பது தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அன்னை மாரியம்மனை சக்தியின் வடிவமாக வழிபடுகிறோம். காஞ்சி காமாட்சி என்று சக்தி பீடம், வழிபாடு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் சக்தியின் வடிவமாகக் கொண்டாடப்படுகிறார். கன்னியாகுமரியில் ஒரு சக்தி வழிபாட்டுக்குரியவராக, தெய்வத்தின் வடிவாக இருக்கிறார். இங்குள்ள சக்திவாய்ந்த தெய்வம் சமயபுரம் மாரியம்மன். இத்தகைய சக்தி மிக்க தெய்வங்களையெல்லாம் பெண் வடிவில் தமிழகத்தில் சக்தியை வணங்கி, ஹிந்து மதத்தில் சக்தி என்பது மிகப் பெரிய பொருள், மிகப் பெரிய அர்த்தம் இருக்கிறது.

ஆனால், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி இந்த சக்தியின் வடிவத்தை, சனாதனத்தை அழித்துவிடுவோம் என்று கூறி வருகிறார்கள். இதை அனுமதிக்க முடியுமா?

இந்த இண்டியா கூட்டணி வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் ஹிந்து மதத்தைத் தொடர்ந்து அவமதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஹிந்து மதத்துக்கு எதிராக அவர்கள் ஒரு கருத்தியலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு கருத்தும் ஆழமாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை. இந்த திமுக, காங்கிரஸ் இண்டியா கூட்டணி எந்த வேகத்தில் ஹிந்து மதத்தை வேகமாகத் தாக்குகிறதோ, அவர்கள் வேறு எந்த மதத்தையும் தொடவில்லை. வேறு எந்த மதத்துக்கு எதிராகவும் ஒரு சொல்லைக்கூடப் பயன்படுத்தவில்லை.

கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் அவர்கள் ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல் ஹிந்து மதத்தை அவமதித்து வருகிறார்கள். இதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

தமிழ்நாட்டின் கலாசாரமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவ இண்டியா கூட்டணி எதிர்ப்பு தெரிவிக்கிறது. புனிதமான செங்கோல் இங்குள்ள சைவ ஆகம ஆதீன மடங்களுக்குச் சொந்தமானது. அவர்களுடைய ஆன்மிக ஆசி பெற்ற அந்த செங்கோலை நாடாளுமன்ற நடவு செய்யக் கூடாது, காட்சிப்படுத்தக் கூடாது என அதை எதிர்த்தார்கள். செங்கோலை அவமதித்தவர்கள் இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.

நாட்டில் பெண் சக்தியின் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் தீர்வு காணும்விதமாக நான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கேடயம் போல செயல்படுகிறேன். உஜ்வாலா சமையல் எரிவாயு இணைப்பை வழங்கினோம். இலவச சிகிச்சைக்காக ஆயுஷ்மான் திட்டத்தைத் தொடங்கினோம். இதுபோன்ற திட்டங்களில் பெண்கள் நலம் தான் மையாக இருந்துள்ளது.

3.65 கோடி பேருக்கு இலவசமாக ரேஷம் கிடைக்கும்போது, என் தாய்மார்கள், சகோதரிகள் பெரும் நிம்மதியுடன் இருந்திருப்பார்கள். ஜல்ஜீவன் திட்டத்தில் வீடு தேடி தண்ணீர் வருகிறது. முத்ரா கடன் பல கோடி ரூபாய் கடன் வழங்குகிறது. இந்தக் கடன் திட்டத்தின் மூலம் பெண்கள்தான் அதிகம் கடன் பெறுகிறார்கள்.

எந்தப் பெண் சக்திக்காக இந்தத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோமோ, அந்தப் பெண் சக்திதான் இன்று எனக்குப் பாதுகாப்பு கவசமாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வசதிகள் இன்னும் பெரிதளவில் பெண்களைச் சென்றடையும். இது மோடியின் உத்தரவாதம்.

இண்டியா கூட்டணியில் திமுகவும், காங்கிரஸும் பெண்களை எப்படியெல்லாம் கேவலமாக நடத்துகிறார்கள், இழிவுபடுத்துகிறார்கள் என்பதற்கு தமிழ்நாடு தான் சாட்சி.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, திமுகவினர் எப்படியெல்லாம் அவரை இழிவுபடுத்தினார்கள். அதுதான் திமுகவின் உண்மையான முகம்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவரும்போது அவர்கள் அதை எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்துபோய் உள்ளது.

வரும் ஏப்ரல் 19-ல் நீங்கள் வழங்கவிருக்கும் தீர்ப்பு, திமுகவுக்கு வழங்கக்கூடிய பாடமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான மனநிலையைக் கண்டிப்பதாக வாக்களிக்க வேண்டும்.

திமுகவும், காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இரு கட்சிகளிலும் ஒரு பக்கம் ஊழல், மறுபக்கம் குடும்ப ஆட்சி. இவர்கள் ஊழலையும், குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து செய்பவர்கள்.

இதனால்தான் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு 5ஜி தொழில்நுட்பம் வளர்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஒரு புது தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து 5ஜியை நடத்தி வருகிறார்கள். அவர்களது 5ஜி என்பது 5-வது தலைமுறை மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இதற்கு முன்பு 2ஜி ஊழல் மோசடி. இவர்கள் செய்த ஊழலைப் பட்டியலிட்டார், அதற்கு நேரம் போதாது. தமிழகத்தின் வளரச்சிக்காக பல லட்சம் கோடி ரூபாயை தமிழகத்துக்கு அனுப்புவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது பாஜக அரசு. ஆனால், இங்குள்ள அரசு அந்தப் பணத்தைக் கொண்டு எப்படியெல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று நினைக்கிறது.

இந்த மேடையில் மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனாரை நினைவுகூர்கிறேன். அவர் தேசிய அரசியலில் மிகப்பெரிய உயரத்தைத் தொடக்கூடிய இடத்தில் இருந்தார். அவர் மனது வைத்திருந்தால், பிரதமராக ஆகியிருக்கலாம். ஆனால், அவரை காங்கிரஸ் குடும்ப ஆட்சி வளரவிடவில்லை. தமிழரான அவருக்கு எதிராக அனைத்து வேலைகளையும் செய்ததுதான் காங்கிரஸின் குணம்.

இந்த மேடையில் தமிழ்நாட்டின் ஒப்பற்ற பெருந்தலைவர் காமராஜரையும் நினைவுகூர்கிறேன். அரசியலில் நேர்மை என்றால் அவர்தான் நினைவுக்கு வருகிறார். அவர் உருவாக்கிய மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் மிகப் பெரிய திட்டம். ஏழை மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கி கல்வியை வளர்க்க வேண்டும் என்ற அந்த மக்கள் நலத் திட்டம் எனக்கான ஒரு முன்னோடியாக இருந்தது.

பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் பல பெரிய பெரிய கனவுகளை வைத்துக்கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய இலக்குகளை நிர்ணயிக்கிறது. பல இலக்குகளை அடைந்து வருகிறோம். இன்று இந்தியாவில் நவீன உள்கட்டமைப்பின் மூலம் மிகப் பெரிய உயரங்களைத் தொட்டு வருகிறோம். பாஜக ஆட்சி ஆயிரக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 12-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள், ஐஐடி தொடங்கப்படுகின்றன.

நம் தொழில்துறை தன்னம்பிக்கையான புதிய பாரத்தை உருவாக்கும் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறது. இந்த அனைத்து வளர்ச்சியும் தமிழகத்தையும் சேர்த்து, தமிழகத்தையும் முன்னுக்குக் கொண்டு செல்கிறது.

நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரு பாதுகாப்பு வழித்தடங்களை அமைத்துக்கொண்டிருக்கிறது. இதில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது.

நாடு முழுவதும் 7 உயர்தர ஜவுளிப் பூங்காவை அமைத்து வருகிறது. இதில் ஒன்று தமிழகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. ரயில்வே உள்கட்டமைப்புகளுக்காக 260 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் வருகிறது.

தமிழ்நாட்டில் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கும் தலைவர்கள் ஒவ்வொருவரையும் வணங்கி வரவேற்கிறேன். ஓர் உறுதியான தமிழகத்தையும், வலிமையான இந்தியாவையும் உருவாக்குவதற்காக சபதம் எடுத்துக்கொண்டு நாட்டு நலனைக் கருத்தில்கொண்டு நம்முடன் இணைந்துள்ள ஒவ்வொருவரையும் இதயப்பூர்வமாக வரவேற்கிறேன்.

அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. ஊழலுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போகும் காலம் அது. எனவே நினைவில்கொள்ளுங்கள். ஏப்ரல் 19-ல் தமிழக மக்கள் புதிய சாதனையைத் தொடங்கி வைக்க வேண்டும். தமிழக பாஜக வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நம் நாட்டில் ஒரு மொழி உள்ளது. அது என்று பிறந்தது என்றே தெரியாத காலத்துக்கு முந்தைய மூத்த மொழி தமிழ் மொழி உள்ளது. இதன் பெருமை யாருக்கும் தெரியவில்லை. நான் பெருமைப்படுகிறேன். உலகிலேயே தொன்மையான மொழி என் தமிழ் மொழி. என் நாட்டின் தொன்மையான மொழி என் தமிழ் மொழி. உலகிலேயே பழமைவாய்ந்த மொழி தமிழ் மொழி.

இத்தனை உணர்ந்து, உங்களிடம் தமிழில் பேச முடியவில்லை என்கிற ஏக்கம் உள்ளது. சேலத்தில் 4, 5 மாதங்கள் இருந்தால், எனக்கு இப்படி தமிழ் வந்துவிடலாம்" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in