
அதிமுக ஆட்சியின்போது சென்னையில் 1,240 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக இன்று 53-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகம் வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"அதிமுக என்ற மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டதன் காரணத்தால் தான் தமிழகம் இன்று இந்தியாவிலேயே வளர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி புரிந்ததால், அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
பொன்விழா கண்ட கட்சி அதிமுக. அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிமுக. இப்படி பல்வேறு சாதனைகளைப் படைத்த கட்சி அதிமுக. இந்த அதிமுகவின் தொடக்க விழாவை மிகச் சிறப்பாக எழுச்சியுடன் கொண்டாடியுள்ளோம்.
சென்னையில் குறைந்த அளவிலான மழை பெய்தபோதிலும் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் தத்தளித்தன. ஆனால் முதல்வர், துணை முதல்வர், மற்ற அமைச்சர்கள் அனைவரும் எந்த இடத்திலும் மழை நீர் தேங்கவில்லை, மக்கள் பாதிக்கவில்லை என பொய்யான தவறான தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். சென்னையில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தாலும் கூட தண்ணீர் தேங்காது என 2022-ல் ஸ்டாலின் அரசு கூறியது. 2023-ல் இதே கருத்தை மீண்டும் கூறினார்கள்.
இந்த முறை தான் அவர்கள் எதுவும் கூறவில்லை. காரணம், மழை நீர் தேங்கியிருப்பதால் எதுவும் கூறவில்லை. உண்மை வெளிவந்துவிட்டது.
அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் கால்வாய்களை அமைப்பதற்காகத் திட்டம் தீட்டப்பட்டு பல்வேறு வங்கிகள் மூலம் நிதியைத் திரட்டி சுமார் 2,400 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் 1,240 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எஞ்சியுள்ள கால்வாய் பணிகளை இவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை. இந்தப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை.
இந்த ஆட்சியில் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்ததாக எதுவும் இல்லை. நாங்கள் கொண்டு வந்த மழைநீர் வடிகால் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியிருந்தால், இன்று சென்னைக்கு இப்படிப்பட்ட நிலை வந்திருக்காது.
சென்னையில் கனமழை பெய்யும்போது வெள்ளநீர் தேங்காமல் இருக்க திருப்புகழ் கமிட்டி என்று ஒரு கமிட்டியை அமைத்தார்கள். இந்த கமிட்டியின் நோக்கம் வெள்ளநீர் வடிவதற்கு என்னென்ன செயல்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்.
இந்த கமிட்டி பரிந்துரைத்தது என்ன, கமிட்டியின் விவரம் என்ன, கமிட்டி அளித்த அறிக்கையின் மூலம் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன உள்ளிட்டவை தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டேன். இன்று வரை வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை.
வெள்ளை அறிக்கை கேட்டதற்கு, துணை முதல்வர் நேற்று பதிலளிக்கிறார், தண்ணீர் வடிந்துவிட்டது இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். முதிர்ச்சி இல்லாத அமைச்சராக தான் பார்க்க முடிகிறது. கனமழை தொடர்ந்து பெய்திருந்ததால் எங்கேயும் சென்றிருக்க முடியும். மழை பெய்யாததால் வெள்ளம் வடிந்துவிட்டது. இதனால்தான் தண்ணீர் தேங்கவில்லை. இவருடையக் கருத்து விளையாட்டுத்தனமாக உள்ளது. மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.
அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டுதான் வெள்ள நீர் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முன்னதாக, பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னையில் வெறும் 400 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் திமுக ஆட்சியில் இதுவரை 781 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று பேட்டியளித்தார்.