விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

கடந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 8.22 சதவீத வாக்குகள் கிடைத்தன. மேலும், 2 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றது விசிக.
விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!
1 min read

விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில, தேசிய கட்சிகளுக்கு, நிரந்தரச் சின்னம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் தேர்தல் நேரங்களில் வழங்கப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற தேர்தல் சின்னங்கள் (முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968-ன் பிரிவு 6ஏ-வின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சில அளவுகோல்களை அரசியல் கட்சிகள் பூர்த்தி செய்யவேண்டும்.

இதன்படி, மாநிலக் கட்சி அங்கீகாரத்தை ஒரு அரசியல் கட்சி பெற, சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளில் அக்கட்சி வெற்றிபெற்றிருக்க வேண்டும் அல்லது மக்களவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் ஒரு மக்களவைத் தொகுதியில் அக்கட்சி வெற்றிபெற்றிருக்க வேண்டும் அல்லது 8 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றிருக்க வேண்டும்.

கடந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 8.22 சதவீத வாக்குகள் கிடைத்தன. மேலும், கடந்த மக்களவை தேர்தலில் பானைச் சின்னத்தில் போட்டியிட்டு, 2 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

இந்நிலையில், தேர்தல் சின்னங்கள் ஆணையில் குறிப்பிட்டுள்ள அளவுகோல்களை நிறைவேற்றியதால் விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்குவதாக கடந்த ஜன.10-ல் கடிதங்களை அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.

விசிகவுக்குப் பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் நாம் தமிழர் கட்சி கோரிய `நிலத்தை உழும் விவசாயி’ அல்லது `புலி’ சின்னங்கள் வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், புதிய சின்னத்தைத் தேர்வு செய்யுமாறு அக்கட்சியை அறிவுறுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in