அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தைப் பெறும் விசிக, நாம் தமிழர்!

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்து 8.19 சதவீதமானது.
அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தைப் பெறும் விசிக, நாம் தமிழர்!
ANI

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகம்-புதுச்சேரியின் 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது.

தமிழக அளவில் இந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் இண்டியா கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தனித்துக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழகத்தின் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியதால், பிற கூட்டணிகளுக்கும், தனித்து நின்ற நாம் தமிழர் கட்சிக்கும் எந்த இடமும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்து 8.19 சதவீதமானது.

அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தைப் பெற பொதுத்தேர்தலில் ஒரு அரசியல் கட்சி 8 சதவீத வாக்கு அல்லது 6 சதவீத வாக்குடன் சேர்த்து ஒரு மக்களவைத் தொகுதியை வென்றிருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி 8.19 % வாக்குகளைப் பெற்றிருப்பதால் அதற்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கப் போகிறது.

மேலும் திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் பானை சின்னத்தில் நின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால் விசிக கட்சிக்கும் மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கப்போகிறது.

இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றச் செல்லும் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ’விசிக எல்லாருக்குமான கட்சி. எங்கள் கூட்டணியின் இந்த முறை வெற்றி கணிசமான அளவில் வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு உண்டான சாத்தியக் கூறுகளும் உள்ளது’ என்றார்.

விசிகவுக்கு மாநில அந்தஸ்து கிடைக்கப்போவது பற்றிப் பேசிய அவர், ‘எங்களின் 25 கால உழைப்புக்கும், தொடர் போரட்டத்துக்கும் கிடைத்த வெற்றி இது. இதற்குக் காரணமான தமிழக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

அரசியல் கட்சிகளுக்கு மாநில கட்சி, தேசிய கட்சி அங்கீகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அளிக்கும். இது போல தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தலில் நிரந்தச் சின்னம் போன்ற சலுகைகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் அங்கீரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in