ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை

ஈவிகேஎஸ் இளங்கோவனின் பொது வாழ்வை போற்றும் விதமாக, அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
1 min read

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த 75 வயதான ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த நவம்பரில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்குத், தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் மருத்துவர்கள்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.19 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அதன்பிறகு மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காதர் மொய்தின், ஜி.கே. மணி, தொல். திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன், டி. ஜெயக்குமார், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு இன்று காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், `ஈவிகேஎஸ் இளங்கோவனின் பொது வாழ்வை போற்றும் விதமாக, அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்’ என அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் இளங்கோவன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். மாலை 4 மணி அளவில், முகலிவாக்கம் எல் அண்டி காலனியில் உள்ள மின் மயானத்தில் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in