நீட் தேர்வு கட்டாயமல்ல: நெல்லையில் ராகுல் காந்தி வாக்குறுதி

"பெரியார் போன்ற பேராளுமைகளைத் தந்த மண் தமிழ்நாடு."
நீட் தேர்வு கட்டாயமல்ல: நெல்லையில் ராகுல் காந்தி வாக்குறுதி

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நடத்துவது குறித்து மாநில அரசின் முடிவுக்கு விட்டுவிடுவோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக தமிழ்நாடு வந்துள்ளார். விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி சென்றார். அங்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடுவர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

"தமிழ்நாட்டுக்கு வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்நாட்டு மக்கள், வரலாறு, கலாசாரம், மொழிதான் எனக்குப் பெரிய பாடம். இந்தியாவைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், தமிழ் மண்ணைச் சேர்ந்த கவிஞர்களை வாசிப்பேன். உங்களுடைய மொழியை நான் பேசமாட்டேன். ஆனால், உங்களுடைய வரலாறு, பேரரசர்கள், பாரம்பரியங்கள், உறவுமுறைகள், உலகின் மற்ற பகுதிகளில் தமிழர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் உள்ளிட்டவற்றை வாசிப்பதன் மூலம், இந்தியாவைப் புரிந்துகொள்கிறேன்.

பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற ஆளுமைகளை நீங்கள் உலகுக்கு அளித்துள்ளீர்கள். இந்தக் கூட்டத்தில் பெரியார், அண்ணா, காமராஜர் மற்றும கலைஞரைப் பற்றி மட்டுமே என்னால் பேசிக்கொண்டிருக்க முடியும்.

சமூக நீதிப் பாதையில் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு நீங்கள் காண்பித்துள்ளீர்கள். எனவே தான், ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை நான் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினேன்.

இந்தியாவில் ஒரு சித்தாந்தப் போர் நடக்கிறது. ஒருபுறம் பெரியாரின் சிந்தனைகளான சமூக நீதி, சமத்துவம், விடுதலை உள்ளன. மறுபுறம் ஆர்எஸ்எஸ், நரேந்திர மோடி மற்றும் அவருடைய அரசின் சிந்தனை உள்ளன. தேர்தல் ஆணையர்களைப் பிரதமர் தேர்ந்தெடுக்கிறார். தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. முதல்வர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

வெள்ள நிவாரணத்துக்கு தமிழ்நாடு நிதி கோரியபோது அது மறுக்கப்பட்டது. தமிழ் மீனவர்கள் உதவிகள் கேட்டபோது, மத்திய அரசு உதவவில்லை. விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோதும், மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்பதை வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.

30 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்களைக் கொண்டு அவை நிரப்பப்படும். தமிழ்நாட்டு மக்களுக்கு நீட் தேர்வு பெரிய சிக்கலாக உள்ளது என்பது எனக்குத் தெரியும். எனவே, நீட் தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்பதை மாநில அரசின் முடிவுக்கு விட்டுவிடுவோம்.

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றுவோம். இந்தியாவில் வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களிலிருந்து ஒரு பெண்ணைத் தேர்வு செய்வோம். அந்தப் பெண்ணுக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அரசுப் பணிகளில் மகளிருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும். மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றுவோம்.

மீனவர்களுக்கென்று தனித் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளோம். மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படும். அவர்களுடையப் படகுக்குக் காப்பீடு வழங்கப்படும்" என்றார் ராகுல் காந்தி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in