
ஒன்றிய அரசு என்று அழைப்பதால் தான் ஆளுநர் மற்றும் மாநில அரசு இடையே மோதல் போக்கு நிலவுவதாக மஹாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரத்தின் ஆளுநராக இருக்கும் சிபி ராதாகிருஷ்ணன் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒன்றிய அரசு என்று அழைப்பதை மாநில அரசு கைவிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
"அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருக்கும் மோதல் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது என்றீர்கள். தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, மத்திய அரசுக்கு ஒரு புதிய மொழியாக்கத்தைத் தந்திருக்கிறார்கள். கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது இல்லாதது தற்போது வந்திருக்கிறது.
மத்திய அரசு என்று தான் நாம் சொல்லிக்கொண்டிருந்தோம். இப்பொழுது புதிதாக ஒன்றிய அரசு என்று சொல்வதன் காரணமாக ஒரு வேற்றுமை உணர்வு விதைக்கப்படுகிறது. அது தான் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்கியதற்கான முழுமுதற் காரணமாக நான் கருதுகிறேன்.
ஒன்றிய அரசு என்று சொல்கின்ற போக்கை மாநில அரசு கைவிட வேண்டும். பாரத தேசம் ஒன்றான ஒற்றுமையான நாடு என்பதை நாம் எல்லோரும் பறைசாற்ற வேண்டும்.
அதை ஒன்றிய அரசு என்று சொன்னால், என்னைப் பொறுத்தவரை மாநில அரசுகள் எல்லாம் பஞ்சாயத்து அரசுகள். தமிழகத்தில் ஓர் உள்ளாட்சி அமைப்புகளில் ஓர் அமைப்பு பஞ்சாயத்து யூனியன் என்று சொல்கிறது. பஞ்சாயத்து யூனியனுக்கு அடுத்து இருப்பது பஞ்சாயத்து தானே. மத்திய அரசு ஒன்றிய அரசு என்று மாறினால், மாநில அரசுகள் பஞ்சாயத்து அரசுகளாக மாறிவிடும்" என்றார் மஹாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.