
நாளை தொடங்கி அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறியதாவது,
இன்று (மார்ச் 30) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை (மார்ச் 31) தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே வேளையில் வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், இன்று (மார்ச் 30) தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (மார்ச் 30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேநேரம், தமிழக மீனவர்களுக்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.