கரூர் விஜய் கூட்டத்தில் 30 பேருக்கும் அதிகமானோர் உயிரிழப்பு: பிரதமர், முதல்வர் இரங்கல் | Karur | TVK Vijay |

முதல்வர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை கரூர் செல்கிறார்கள்.
கரூர் விஜய் கூட்டத்தில் 30 பேருக்கும் அதிகமானோர் உயிரிழப்பு: பிரதமர், முதல்வர் இரங்கல் | Karur | TVK Vijay |
1 min read

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சனிக்கிழமைதோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். இன்று காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய விஜய், காலை. 8.45 மணியளவில் தான் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார். பிற்பகல் 2.30 மணிக்கு மேல் நாமக்கல்லில் பிரசாரத்தைத் தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக கரூர் சென்றார் விஜய். கரூர் நெடுஞ்சாலையிலிருந்து பிரசாரம் நடைபெற திட்டமிட்டிருந்த பகுதி வர தாமதமானது. அதிகளவில் தொண்டர்கள் கூடியதால், காவல் துறையினரின் உதவியுடனே அவர் பிரசார இடத்தை வந்தடைந்தார். இரவு 7 மணியளவில் தான் விஜய் உரையைத் தொடங்கினார். அவர் பேசும்போதே பலர் மயக்கமடைந்தார்கள். விஜய் பேருந்திலிருந்தபடி தண்ணீர் பாட்டில்களை கொடுத்தார். ஆம்புலன்ஸ் வாகனங்களை வரவழைத்தார். குழந்தை ஒன்று காணவில்லை என விஜய் மைக் மூலம் அறிவித்து காவல் துறையினரை உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

விஜய் தனது உரையை முடித்துச் சென்ற பிறகு, பலருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. கரூர் அரசு மருத்துவமனையில் மயக்கமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். கரூர் அரசு மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ் வாகனங்கள் படையெடுக்கத் தொடங்கியபோதே நிலைமையின் வீரியத்தை உணர முடிந்தது.

திமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றார். இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை கரூர் செல்கிறார்கள்.

திருச்சி விமான நிலையத்தில் விஜயிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். விஜய் எந்தப் பதிலையும் தெரிவிக்காமல் அவர்களைக் கடந்துச் சென்றார்.

Karur | Karur Stampede | TVK Vijay | Vijay | TVK Karur

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in