ராணிப்பேட்டையில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் அமையவுள்ள டாடா மோட்டர்ஸ் ஆலை மற்றும் காலணித் தொழிற் பூங்காவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் சிப்காட்டில் சுமார் 470 ஏக்கர் பரப்பளவில் டாடா மோட்டர்ஸ் ஆலையை அமைக்க தமிழக அரசும், டாடா மோட்டர்ஸ் நிறுவனமும் ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொண்டன. ரூ. 9,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கத் திட்டமிட்டப்பட்ட இந்த ஆலையின் மூலம் சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த் ஆலையில் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் பிரபல சொகுசு கார்களான ஜாகுவார், லாண்ட் ரோவர் ஆகியவை தயாரிக்கப்படவுள்ளன. மேலும் இதே பனப்பாக்கம் சிப்காட்டில் மிகப்பெரிய காலணி உற்பத்திப் பூங்கா ஒன்றும் அமையவுள்ளது.
ரூ. 400 கோடி முதலீட்டில் 250 ஏக்கர் பரப்பளவில் இந்தக் காலணி உற்பத்தித் தொழிற்பூங்கா உருவாகிறது. இந்தப் பூங்காவில் பல முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி மையத்தை அமைக்கின்றன. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், அதில் பெரும்பாலானோர் பெண் தொழிலாளர்கள் எனவும் தகவல் வெளியாகிவுள்ளது.
பனப்பாக்கத்தைச் சுற்றி உள்ள தோல் பொருட்கள் உற்பத்தி மையங்களான ஆம்பூர், வாலாஜா, ஆற்காடு, வாணியம்பாடி, ராணிப்பேட்டை ஆகியவை இந்தக் காலணி உற்பத்தித் தொழிற்பூங்காவால் பயன்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த டாடா மோட்டர்ஸ் ஆலை மற்றும் காலணி உற்பத்தித் தொழிற்பூங்கா ஆகியவற்றுக்கு வரும் செப்.28-ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.