பேராயர் எஸ்றா சற்குணத்தின் உடலை காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ECI திருச்சபையின் முதல் பேராயரான எஸ்றா சற்குணம் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த செப்.22-ல் சென்னையில் காலமானார். இதைத் தொடர்ந்து இன்று (செப்.26) கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் எஸ்றா சற்குணத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் சகிதமாக சென்னை வானகரத்தில் வைக்கப்பட்டிருந்த பேராயர் எஸ்றா சற்குணத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதைத் தொடர்ந்து எஸ்றா சற்குணத்தின் உடலை காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
மேலும் இன்று, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் எஸ்றா சற்குணத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது கைபேசி வாயிலாக எஸ்றா சற்குணத்தின் மகள் கதிரொளியிடம் தன் இரங்கலை தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்.
ECI திருச்சபையின் முதல் தேசியத் தலைவராக செயல்பட்ட எஸ்ரா சற்குணத்தின் தலைமையின் கீழ் சுமார் 10,000 கிறிஸ்துவ தேவாலயங்கள் இந்தியா முழுவதும் நிறுவப்பட்டுள்ளன. மறைந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கு நெருங்கிய நபராக எஸ்றா சற்குணம் அறியப்பட்டார்.