தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியவை அப்பட்டமான பொய்: ராமதாஸ்

முதல்வர் தவறான தகவல்களை வழங்கியுள்ள நிலையில், அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடியும்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியவை அப்பட்டமான பொய்: ராமதாஸ்
1 min read

பிஹார் மாநில சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்துத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொய்யான தகவல்களைக் கூறியதாக குற்றம்சாட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இன்று (ஜன.11), பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

`தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, தமிழக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி வினா எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், `பிஹார் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால், அதற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. அதனால்தான் கூறுகிறேன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நமக்கு அதிகாரம் இல்லை’ என்றார்.

முதல்வர் கூறியது அப்பட்டமான பொய். பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.  மாறாக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது செல்லும் என பிகார் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன.

அதேநேரம் அந்த சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் பிஹார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம், ஒவ்வொரு பிரிவு மக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த அளவுக்குப் பின்தங்கியுள்ளனர் என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இல்லாமல், இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் அது செல்லாது என்று தீர்ப்பளித்தது.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் இந்த இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பே செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். பிஹார் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நல்ல வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றாகப் படிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா?  என்ற முடிவுக்கு வர வேண்டும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் எவரேனும் தவறான தகவல்களை அளித்தால் அவர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்ப முடியும். முதல்வர் தவறான தகவல்களை வழங்கியுள்ள நிலையில், அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடியும். முதல்வருக்கு இப்படி ஒரு தவறான தகவலை வழங்கிய அதிகாரியைக் கண்டறிந்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகநீதியை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்களைப் போலப் பேசும் திமுகவினருக்கு, உண்மையில் தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி மக்களுக்கு நீதி வழங்க விருப்பம் இல்லை. அதனால்தான் இல்லாத காரணங்களைக் கூறுகின்றனர். ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in