இண்டியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்: மு.க. ஸ்டாலின்

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்ANI

இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரமாகப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வருரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

“ஜனநாயகத்தையும் - மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இண்டியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் - ஏப்ரல் 19.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, 'ஊழல் மோடி' தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது.

உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார்.

வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன்.

ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள். தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.

இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள்.

2019 முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in