
மதுரையின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் மா மதுரை விழாவை காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். விழாவைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:
`தவறு செய்தவன் மன்னனே ஆனாலும், மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியைக் காக்க தன்னுடைய உயிரைத் தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் இது. திருமலை நாயக்கரும், ராணி மங்கமாளும் ஆண்ட இடம் இது. புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமையப்பெற்ற கோயில் நகரம் இது. புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா மாபெரும் பண்பாட்டு விழாவாக இங்கு நடைபெற்று வருகிறது.
1866-ம் ஆண்டே நகராட்சியான ஊர் இது. சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது மாநகராட்சியாக மதுரையை அறிவித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. அண்ணல் காந்தியை அரையாடை மனிதராக மாற்றியதும் இந்த மதுரைதான். இத்தனை பெருமைகள் கொண்ட மதுரையை எல்லோரும் போற்றலாம் கொண்டாடலாம்.
2013 முதல் மா மதுரை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களின் முயற்சியால் இது தொடங்கப்பட்டது. வரலாற்றைப் போற்றுவோம், வைகையைப் போற்றுவோம், மதுரையைப் போற்றுவோம் என்ற தலைப்புகளில் இது நடைபெற்று வந்தது.
இந்த ஆண்டும் மா மதுரை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 8) தொடங்கி, 11-ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. மதுரையின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் பெரு விழாவாக இது நடக்கும். இந்த ஆண்டுக்கான விழாவை முன்னெடுத்துச் செல்லும் சிஐஐ அமைப்பையும், யங் இந்தியன்ஸ் அமைப்பையும் நான் பாரட்டுகிறேன்.
ஒரு ஊரை அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். அதே நேரம் நவீன வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பழமைக்குப் பழமையாக புதுமைக்குப் புதுமையாக இளைஞர்கள் இயங்கவேண்டும். பொழுதுபோக்காக அல்லாமல், பண்பாட்டுத் திருவிழாவாக இது நடந்து வருகிறது மகிழ்ச்சியளிக்கிறது. சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் இது போன்ற பண்பாட்டு விழாக்களை எல்லோரும் கொண்டாட வேண்டும்’.