நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிய பிறகு இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
`நீட் தேர்வு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்து தவறே நடைபெறவில்லை எனக் கூறிய ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய பிறகு இந்தத் தேர்வை நடத்தும் என்டிஏ அமைப்பின் தலைவரை மாற்றியது. தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்று சட்டப்பேரவையில் மத்திய அரசைக் குற்றம் சாட்டிப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்
மேலும், `பல ஆண்டு காலமாக நீட் தேர்வுக்கு எதிராக எதிராக தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் போர் தொடுத்து வந்த நிலையில் நீட் தேர்வின் உண்மையான தன்மையை உணர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிரான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தமிழ்நாட்டின் குரல் இந்தியாவின் குரலாக நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது’ என்று தன் உரையில் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தேசிய அளவில் நீட் தேர்வை அகற்றிட கீழ்கண்ட தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்தார் ஸ்டாலின்:
"கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில் பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையில் மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையிலும் அமைந்துள்ளன.
நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் இந்தத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களித்து பள்ளிக் கல்வியிலும் மாணவர்கள் பெறும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக இந்த சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்க சட்டமுன்வடிவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும்.
தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையையும் பல்வேறு மாநிலங்கள் தற்போது எதிர்த்து வரும் நிலையிலும் தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது''.