வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகைகளை வைக்க முன்வர வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர்கள் நல வாரிய கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் உரையாற்றிய அவர், “தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழைக் காண முடியவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது” என்று பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப் பலகைகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக வணிகர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் வாக்குறுதி அளித்துள்ளார்கள். இதுபோன்ற செயல்கள் நாங்கள் சொல்லி செய்வதை விட நீங்களே முன்வந்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழை காண முடியவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது. எனவே பெயர் பலகைகளை மாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் நம் திமுக அரசின் கொள்கை. எனவே தமிழ்நாட்டில் உள்ள பெரியத் தொழிற்சாலைகள் மட்டுமின்றி சிறு வணிகர்களும் தன்களின் வணிகத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக உள்ளது” என்றார்.
முன்னதாக, காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் அவசியம் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும்” என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.