
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை அந்நாட்டு ஊர்க்காவல் நீதிமன்றம் விடுவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததை ஒட்டி, கடந்த ஜூன் 15-ல் இருந்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை அவ்வப்போது கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்து வருகிறது இலங்கை கடற்படை.
கடந்த ஜூன் 15-ல் இருந்து கிட்டத்தட்ட 83 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ள இலங்கை கடற்படை, அவர்கள் உபயோகித்த விசைப்படகுகளையும், நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 26 தமிழக மீனவர்கள் மீதான வழக்கு விசாரணை இன்று (ஜூலை 30) இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் முடிவில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 17 மீனவர்களும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 மீனவர்களும் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
23 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்ற 3 மீனவர்களுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.