
சென்னையில் விளையாட்டு திடல்களை தனியார்மயமாக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து, மாநகராட்சியின் முடிவை விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்த்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சைதாப்பேட்டை அம்மா பூங்கா உள்ளிட்ட 9 செயற்கைபுல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியார்மயமாக்கும் வகையில் சென்னை மாநாகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதனை அடுத்து மாநகராட்சியின் முடிவைக் கண்டித்து, புதிய தலைமுறைக்கு விளையாட்டு ஆர்வலர் ஒருவர் அளித்த பேட்டி பின்வருமாறு:
`சைதாப்பேட்டை கால்பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட 9 மைதானங்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு சென்னை மாநாகராட்சியின் நிலைக்குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. இவ்வாறு விளையாட்டுத் திடல் தனியாருக்குச் சென்றால், கட்டணம் செலுத்திய பிறகே மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் அங்கே பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படுவார்கள்’ என்றார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அதில், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 9 செயற்கைப்புல் கால்பந்து திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட அனுமதியளிக்கும் தீர்மானமும் ஒன்றாகும்.
இதனால் இதுவரை இந்த கால்பந்து திடல்களை இலவசமாக பயன்படுத்திவந்தவர்கள் இனி ஒரு மணி நேரத்துக்கு ரூ. 120-ஐ கட்டணமாக செலுத்தவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.