சென்னை சென்ட்ரலுக்கு ரயில் பார்சலில் வந்த கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

இவற்றை அழிப்பதற்காகக் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்கிறோம். இதை யார் அனுப்பியது என்பது தெரியவில்லை
சென்னை சென்ட்ரலுக்கு ரயில் பார்சலில் வந்த கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
ANI
1 min read

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் பார்சலில் வந்த கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உணவுப்பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார், `சென்னை சென்ட்ரலுக்கு 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சிகள், ஆட்டுக்கால்கள், காளான்கள், பார்பெக்யூவில் தயாரான பன்னீர், கபாப் போன்ற நிறைய பொருட்கள் பார்சலில் வந்திருக்கின்றன.

இந்தப் பார்சல்கள் தில்லியில் இருந்து சென்னைக்கு வரும் தமிழ்நாடு விரைவு ரயிலில் வந்திருக்கின்றன. முன்பே இவை வந்திருக்க வேண்டும் ஆனால் தாமதமாக வந்திருக்கிறது. கெட்டுப்போன இவற்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வருகிறது. இவற்றில் புழுக்களும் உள்ளன.

இவற்றை அழிப்பதற்காகக் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்கிறோம். இதை யார் அனுப்பியது என்பது தெரியவில்லை. இதை யாரும் வந்து எடுத்துக்கொண்டு போகாததால் இங்கேயே இருந்துள்ளது. இது குறித்தத் தகவல் எங்களுக்குக் கிடைத்தை அடுத்து இவற்றை நாங்கள் பறிமுதல் செய்திருக்கிறோம்.

உணவுப்பாதுகாப்பு விதிகளின்படி இது போல யார் பார்சல் அனுப்பினாலும் சம்மந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவை பார்சலில் தெளிவாக இருப்பதை உறுதி செய்யுமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். எளிதில் கெட்டுப்போகக் கூடிய உணவுகளை முகவரி இல்லாமல் முன்பதிவு செய்யவேண்டாம் என்றும் நாங்கள் கேட்டுக்கொண்டோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in