சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம்: கொலையாளி என்கவுன்ட்டர்! | Encounter | SSI Death

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 1 கோடி நிவாரணம் அறிவித்தார்.
சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை நடைபெற்ற இடம்
சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை நடைபெற்ற இடம்https://x.com/KP_Aashish
1 min read

உடுமலைப்பேட்டை அருகே தந்தை, மகன்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை நேற்றைக்கு முந்தைய தினம் (ஆக. 5) விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், கொலையாளி மணிகண்டன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த குடிமங்கலம் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ.வான மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அங்கு திண்டுக்கல்லை சேர்ந்த மூர்த்தி, காமாட்சி தம்பதியரும் அவர்களின் மூத்த மகன் மணிகண்டன், அவரது மனைவி சபீனா ஆகியோர் தங்கி தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மூர்த்தியை பார்க்க அவரது இளைய மகன் தங்கபாண்டியன் கடந்த ஆக. 5 அன்று வந்துள்ளார். இரவில் தந்தையும், மகன்கள் இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த மகன்கள் இருவரும் தந்தையை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இது குறித்த அக்கம்பக்கம் இருந்த மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்ததும், அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், வாகன ஓட்டுநர் அழகுராஜாவுடன் அங்கே சென்றுள்ளார்.

அப்போது மணிகண்டனும், தங்கபாண்டியனும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழந்தார்.

அவர்களிடம் இருந்து தப்பிய ஓட்டுநர் அழகுராஜா, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தந்தையும், இரு மகன்களும் தப்பிச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க நேற்று (ஆக. 6) இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. சண்முகவேல் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 1 கோடி நிவாரணம் அறிவித்தார்.

இதற்கிடையே, மூர்த்தியும் அவரது இளைய மகன் தங்கபாண்டியனும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஆக. 6) மாலை சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து மேல் விசாரணைக்காக அவர்கள் உடுமலைப்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், மணிகண்டனை கைது செய்ய காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது சரவணக்குமார் என்ற காவலரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in