சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை: எடப்பாடி பழனிசாமி

"விதியைப் பின்பற்றி பேச வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் சொல்கிறார். விதியைப் பின்பற்றி பேசினால், அனுமதி மறுக்கிறார்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்யுள்ளார்.

அதிமுக உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க இன்றும் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார்கள். சட்டப்பேரவையின் அலுவல் நடவடிக்கைகள் ஒத்திவைத்து, கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரினார்கள். எனினும், அவை அலுவல் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அனுமதி கோர வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கமளித்தார்.

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட, இவர்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், அதிமுக உறுப்பினர்கள் நடப்புக் கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

"விதி எண்: 56-ல் குறிப்பிட்டுள்ளவாறு அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்து விவாதிக்க பேரவையின் பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என நாங்கள் வற்புறுத்தினோம். எங்களுடையக் கட்சியைச் சேர்ந்த கொறடா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரியிருந்தார்கள்.

சட்டப்பேரவையில் விதியின்படி நடந்துகொண்டால் பேச அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்டப்பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார். எந்த விதியையும் பின்பற்றாமல் பேசுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மக்களுடைய உயிர் பிரச்னையான கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விதி எண்: 56-ன் கீழ் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டோம். அவர் அனுமதி மறுத்துவிட்டார். விதியைப் பின்பற்றி பேச வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் சொல்கிறார். விதியைப் பின்பற்றி பேசினால், அனுமதி மறுக்கிறார். சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்படவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் இருந்துகொண்டு அரசியல் பேசுவது அழகல்ல.

விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் வருவதால், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in