
2025-2026 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 14-ல் தாக்கல் செய்யப்படும் என இன்று (பிப்.18) அறிவித்துள்ளார் சபாநாயகர் அப்பாவு.
தமிழக பட்ஜெட் தாக்கல் தொடர்பாக இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது,
`தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் வைத்து, வரும் 2025 மார்ச் 14-ம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு கூட்டியுள்ளேன்.
அன்றைய தினம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2025-2026-ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்டை) தாக்கல் செய்வார். மார்ச் 15-ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மேலும், பேரவை விதி 193(1)-ன் கீழ் 2025-2026-ம் நிதியாண்டிற்கான முன்பண மானிய கோரிக்கைகளும், பேரவை விதி 189(1)-ன் கீழ் 2024-2025-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளும் மார்ச் 21-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
எத்தனை நாட்களுக்கு சட்டப்பேரவை நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும்’ என்றார்.