தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது! | TN Assembly | Appavu |

அக்டோபர் 15, 16, 17 ஆகிய மூன்று நாள்களிலும் கேள்வி நேரம் உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது! | TN Assembly | Appavu |
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு கூறியதாவது:

"இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின் முடிவின்படி 14.10.2025 (நாளை) முதல் 17.10.2025 வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரானது நாளை காலை 9.30 மணிக்குக் கூடி, மறைந்த முன்னாள் 8 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். இதன் தொடர்ச்சியாக கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம், கேரள முன்னாள் முதல்வர் பி.எஸ். அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஷிபு சோரன், நாகலாந்து ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி மற்றும் மருத்துவர் பீலா வெங்கடேசன் உள்பட அனைவருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே. அமுல் கந்தசாமி மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை நிகழ்ச்சிகள் அன்றைய தினம் ஒத்திவைக்கப்படும்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த நாளான 15-ம் தேதி கூடுதல் மானியக் கோரிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். தொடர்ந்து, அக்டோபர் 16 அன்று விவாதம் நடைபெறும். அக்டோபர் 17 அன்று விவாதத்துக்கு பதில் அளிக்கப்படும்.

அக்டோபர் 15, 16, 17 ஆகிய மூன்று நாள்களிலும் கேள்வி நேரம் உள்ளது. பாமக தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள கடிதங்கள் என் பரிசீலனையில் உள்ளன. இன்றைய ஆய்வுக் குழுக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இருவர் தவிர மீதமுள்ள அனைவரும் வந்தார்கள்" என்றார் அப்பாவு.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கரூர் கூட்டநெரிசல் விவாதப் பொருளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Appavu | Tamil Nadu Assembly | Speaker Appavu | Tamil Nadu Assembly Session |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in