கவனமாகப் பேச வேண்டும்: உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

“பரபரப்புக்காக பேசுவதற்கும், அமைச்சர் பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது”
உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை
உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரைANI

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதற்கு, பேசும் போது கவனமாக பேச வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு சென்னை காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில், மலேரியா மற்றும் டெங்கு நோய்களைப்போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது. நாடு முழுவதிலுமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வலுவாகக் கிளம்பின. பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

தனது கருத்து குறித்து உத்தரப் பிரதேசம், கர்நாடகம், பிகார், மகாராஷ்டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் எனப் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றிணைப்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்த போது, “மதச் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, பிறகு சட்டப்பிரிவு 32-ன் கீழ் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுவது. நீங்கள் பேசியதன் விளைவுகள் என்ன என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று உச்ச நீதிமன்றம் சாடியது.

மேலும், "நீங்கள் சாதாரண மனிதரல்ல, ஓர் அமைச்சர். பேசியதன் விளைவுகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்" என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதில், “உதயநிதி தொடர்ந்த மனுவில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். பேசும் போது அவர் கவனமாக பேச வேண்டும். பரபரப்புக்காக பேசுவதற்கும், அமைச்சர் பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது” என உச்ச நீதிமன்றம் கூறியது.

மேலும் இந்த வழக்கு விசாரணை மே 6- க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in