
தடையை மீறி அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தைக் கண்டித்து, வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி தலைமையிலான பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்த பாமக சார்பில் காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் இதற்குக் காவல்துறை அனுமதியளிக்கவில்லை. இருப்பினும் சௌமியா அன்புமணி சார்பில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாமக மகளிரணி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் இன்று (ஜன.2) காலை வள்ளுவர் கோட்டத்திற்கு முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டனர். அங்கே போராட்டம் மேற்கொள்ள வந்த பாமகவினரைக் கைது செய்யத் தொடங்கினார்கள் காவல்துறையினர். இதைத் தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் மேற்கொள்ள காலை 10.30 மணி அளவில் காரில் வந்தார் சௌமியா அன்புமணி. அப்போது காருக்குள் இருந்தபடி அவர் பேசியவை பின்வருமாறு,
`பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக போராட்டம் மேற்கொள்ள வந்தவர்களைக் கைது செய்கின்றனர். நாங்கள் என்ன தவறு செய்தோம்? தவறு செய்தவர்களை முதலில் கைது செய்யுங்கள். குற்றவாளிகளைக் கைது செய்யுங்கள். கஷ்டப்படும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்காமல், எங்களைக் கைது செய்ய 300 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது நியாயமா?’ என்றார்.
இதனை அடுத்து சௌமியா அன்புமணியைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே, பாமக போராட்டத்திற்கு அனுமதி அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார் பாமக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் கே. பாலு.
வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், `பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பி, போராட்டம் நடத்த பாமகவுக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தார்.