
26 ரயில்களில் இருக்கும் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்துள்ளது தெற்கு ரயில்வே. முன்பதிவில்லா பெட்டிகளுக்குப் பதில், கூடுதலாக ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-மைசூரூ காவேரி விரைவு ரயில், சென்னை திருவனந்தபுரம் மெயில், சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா அதிவிரைவு ரயில், கொச்சுவேலி-நிலம்பூர் சாலை ராஜ்ய ராணி விரைவு ரயில், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் ஆகியவற்றில் இருந்த 4 முன்பதிவில்லா பெட்டிகள், 2 முன்பதிவில்லா பெட்டிகளாக குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேநேரம், சென்னை-ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், சென்னை-நாகர்கோயில் அதிவிரைவு ரயில், புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் டெக்கான் அதிவிரைவு ரயில், புதுச்சேரி-மங்களூர் சென்ட்ரல் விரைவு ரயில், விழுப்புரம்-கரக்பூர் அதிவிரைவு ரயில், திருநெல்வேலி-புரூலியா அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்களில் உள்ள 4 முன்பதிவில்லா பெட்டிகள் 3 ஆக குறைக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வேயின் இந்த முன்பதிவில்லா பெட்டிகள் குறைப்பு நடவடிக்கையால், சென்னையில் இருந்து மாலை நேரத்தில் அரக்கோணம், காட்பாடி, வாலாஜா, ஜோலார்பேட்டை போன்ற இடங்களுக்கு ரயிலில் செல்லும் பயணிகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
தற்போது, இரு முன்பதிவில்லா பெட்டிகளைக் கொண்ட ரயிலுக்கு 600 முதல் 700 முன்பதிவில்லா பயணச்சீட்டுகள் விற்கப்படுகின்றன. எனிலும், 2 முன்பதிவில்லா பெட்டிகளில் அதிகபட்சமாக சுமார் 350 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.
எனவே இந்த நடவடிக்கையால் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகள், முன்பதிவு பெட்டிகளில் ஏறுவதற்கே வாய்ப்புகள் உள்ளதாகக் கூறி தெற்கு ரயில்வே முடிவு மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
அதேநேரம், ஒரு ரயிலுக்கு 2 முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே இருக்கவேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே வாரியம் வெளிட்ட கொள்கையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெற்கு ரயில்வே சார்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அகற்றப்படும் முன்பதிவில்லா பெட்டிகளுக்குப் பதில் இந்த ரயில்களில் கூடுதலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.