
பழைய பாம்பன் ரயில் பாலத்துக்குப் பதில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் தரக்குறைவாக உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது தெற்கு ரயில்வே.
புதிய பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானத்தைப் பார்வையிட்டு, ஆராய்ந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி, தரக்குறைவான வகையில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும், புதிய பாலத்தை கட்டுவதற்கான திட்டமிடல் பணியில் இருந்தே குறைபாடுகள் இருந்ததாகவும் விமர்சனத்தை முன்வைத்தாக நேற்று (நவ.28) செய்தி வெளியானது.
அண்மையில் 90 கி.மீ. வேகத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு, பாலத்தின் லிஃப்ட் பகுதியில் வரும்போது மட்டும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கவேண்டும் எனவும், லிஃப்ட் பகுதி தவிர பாலத்தில் மீதி பகுதியில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கலாம் எனவும் பாதுகாப்பு ஆணையர் கூறியதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், புதிய பாம்பன் ரயில் பாலம் தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (நவ.28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு,
`புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்து சென்னை மற்றும் மும்பை ஐ.ஐ.டி.களின் நிபுணர்கள் தர மதிப்பீடு வழங்கியுள்ளனர். பாலத்தின் இணைப்பு வெல்டிங் தர சோதனை 100 சதவீதம் சரிபாக்கப்பட்டுள்ளது. பாலிசிலோக்சோன் பெயிண்ட் பயன்படுத்தியதால் 35 வருடங்களுக்கு உப்பு அரிப்பு பிரச்னை இருக்காது. புதிய பாம்பன் ரயில் பாலத்துக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார்’.
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரம் தொடர்பாக வெளியான செய்திகளைக் குறிப்பிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறக்கப்படுவதற்கு முன்பு அனைத்துவித பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொள்ளுமாறு, இன்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவிற்குக் கடிதம் எழுதியுள்ளார் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி.