
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் போதிய முன்பதிவு இல்லாத காரணத்தால் 6 ரயில் சேவைகளை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 அன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு மக்கள் பயணிக்க ஏதுவாகப் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து வியாழன், வெள்ளி, திங்கட்கிழமைகளில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் ஆயுத பூஜை விடுமுறையில் இருந்தே இயக்கப்பட்டன.
மேலும் கூடுதல் சிறப்பு ரயில்களும் கடந்த அக்டோபர் 16 அன்று அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டன. பொதுவாக பண்டிகை நாள்களில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மற்ற மாவட்டங்களுக்குப் பயணிப்பது வழக்கம். இந்த ஆண்டும் ரயிலில் லட்சக் கணக்கானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். இதனால் சிறப்பு ரயில்களின் முன்பதிவு திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே முடிவடைந்தன.
இந்நிலையில், அக்டோபர் 22 முதல் 29 வரை அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில்களில் போதிய முன்பதிவு இல்லாததால், அவற்றின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
“போதிய முன்பதிவு இல்லாத காரணத்தால் பின்வரும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
அக்டோபர் 22 அன்று சென்னை சென்ட்ரல் - கோட்டயம் இடையே இயக்கப்படவிருந்த ரயில் எண் 06121 சிறப்பு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கோட்டயத்தில் இருந்து மறுமார்க்கமாக 23 அக்டோபர் இயக்கப்படவிருந்த ரயில் எண் 06122 சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
அக்டோபர் 24 மற்றும் 26 ஆகிய நாள்களில் இயக்கப்படவிருந்த செங்கல்பட்டு - திருநெல்வேலி இடையிலான ரயில் எண் 06153 அதிவிரைவு ரயில் மற்றும் மறு மார்க்கத்தில் இயக்கப்படவிருந்த திருநெல்வேலி - செங்கல்பட்டு ரயில் எண் 06154 அதிவிரைவு ரயில் ஆகியவையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அக்டோபர் 28 அன்று இயக்கப்படவிருந்த நாகர்கோவில் சென்னை சென்ட்ரல் இடையிலான ரயில் எண் 06054 சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 29 அன்று மறுமார்க்கத்தில் இயக்கப்படவிருந்த சென்ட்ரல் - நாகர்கோவில் இடையிலான ரயில் எண் 06054 சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் இந்த மாறுதலுக்கு ஏற்ப தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.