
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ஆயுத பூஜை மற்றும் பள்ளி விடுமுறைகளை ஒட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாகக் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
”ஆயுத பூஜையையொட்டி சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் இடையே கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில் எண் 06075 சென்னை எழும்பூரில் இருந்து நாளை (செப். 30) இரவு 10:15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (அக். 1) பிற்பகல் 2:05-க்கு திருவனந்தபுரத்தை அடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 06076, அக்டோபர் 5 அன்று மாலை 4:30 மணிக்குப் புறப்பட்டு, அக்டோபர் 6 அன்று காலை 10:30 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர், கோட்டயம், கொல்லம் வழியாகச் செல்லும்.
அதேபோல், சென்னை தாம்பரம் - செங்கோட்டை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண் 06013, தாம்பரத்தில் இருந்து நாளை (செப். 30) மாலை 4:15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (அக். 1) அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும். ஒரு வழி ரயிலான இது, செங்கல்பட்டு, விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாகச் செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு மெமு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண் 06161, நாளை (செப்.30) இரவு 11:45-க்குப் புறப்பட்டு, மறுநாள் (அக்.1) காலை 10:15 மணிக்கு மதுரையை வந்தடையும். ஒரு வழி ரயிலான இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பன்ருட்டி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்காணல் வழியாக மதுரையை வந்தடையும்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.