
தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் சில பிரபல ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளை 3-அடுக்கு ஏசி பெட்டிகளாக மாற்ற முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை தெற்கு ரயில்வே கைவிட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் தொடங்கி திருநெல்வேலி வரை செல்லும் நெல்லை அதிவிரைவு ரயில் (இரு மார்க்கம்) மற்றும் சென்னை எழும்பூரில் தொடங்கி செங்கோட்டை வரை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் (இரு மார்க்கம்) ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக 22 பெட்டிகள் உள்ளன.
மிகவும் குறிப்பாக, இந்த ரயில்களில் தலா எட்டு ஸ்லீப்பர் பெட்டிகளும், ஐந்து 3-அடுக்கு ஏசி பெட்டிகளும் உள்ளன. இதில், ஒரு ஸ்லீப்பர் பெட்டியைக் குறைத்து, அதற்கு பதிலாக ஒரு 3-அடுக்கு ஏசி பெட்டியை உயர்த்த தெற்கு ரயில்வே திட்டமிட்டிருந்ததாக செய்தி வெளியானது.
ஆனால் இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடவடிக்கையால் ஸ்லீப்பர் பெட்டிகளில் உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்றும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு பயணச் செலவுகள் அதிகரிக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், முன்பு திட்டமிடப்பட்ட இந்த ஸ்லீப்பர் பெட்டி குறைப்பு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேநேரம், இதேபோல சேரன், நீலகிரி, சென்னை மங்களூரு, சென்னை திருவனந்தபுரம் ஆகிய ரயில்களிலும் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் அது குறித்து எந்த ஒரு சுற்றறிக்கையும் தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்படவில்லை என்று தெரிகிறது.