சென்னையிலிருந்து கோவை மற்றும் திருச்சிக்கு முன்பதிவில்லாத மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே மூன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் போத்தனூருக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சிக்கு தாம்பரத்திலிருந்தும் எழும்பூரிலிருந்தும் தலா ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06159) இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 10.10 மணிக்கு சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு நாளை (அக்டோபர் 31) காலை 7 மணியளவில் கோவை மாவட்டம் போத்தனூர் சென்றடைகிறது.
இதே ரயில் (06160) மறுமார்க்கமாக போத்தனூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 7.45 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.
இந்த ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தாம்பரம் - திருச்சி - தாம்பரம் மெமு (06157/06158) முன்பதிவில்லாத ரயில் இன்று இயக்கப்படுகிறது. 06157 தாம்பரம் - திருச்சி மெமு முன்பதிவில்லாத ரயில் நள்ளிரவு 12.35 மணிக்கு (அக்டோபர் 31 அன்று) தாம்பரத்திலிருந்து புறப்படுகிறது. காலை 6.30 மணிக்குத் திருச்சி சென்றடைகிறது.
மறுமார்க்கமாக திருச்சி - தாம்பரம் மெமு முன்பதிவில்லாத ரயில் (06158) திருச்சியிலிருந்து அக்டோபர் 31 அன்று காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு அதே நாள் இரவு 8.15 மணியளவில் தாம்பரம் வந்தடைகிறது.
சென்னை எழும்பூரிலிருந்தும் திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06155/06156) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் - திருச்சி மெமு முன்பதிவில்லாத விரைவு ரயில் (06155) இன்றிரவு (அக்டோபர் 30) இரவு 9.10 மணியளவில் எழும்பூரிலிருந்து புறப்படுகிறது. நாளை காலை 5.45 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.
மறுமார்க்கமாக இந்த ரயிலானது (06156) திருச்சியிலிருந்து புறப்பட்டு எழும்பூருக்குப் பதில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து நாளை (அக்டோபர் 31) நண்பகல் 12 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.