அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்குச் சவாலாக இருக்கும் கடும் வெயில்!

அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்குச் சவாலாக  இருக்கும் கடும் வெயில்!
1 min read

தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரசாரம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் தொண்டர்கள் கூட்டம் காலையில் அதிகரித்து இருந்தாலும், நண்பகலில் பிரசாரத்தை எதிர்கொள்ள கூட்டம் சேர்ப்பது அரசியல் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

கடும் வெப்பத்தைச் சமாளிக்கவும் மக்களைச் சென்றடையவும் அரசியல் கட்சிகள் பல்வேறு வழிகளைப் பின்பற்றி வருகின்றன. திமுக பிரசாரக் கூட்டம் ஒன்றில் வெயிலின் கடுமையைத்  தணிக்கும் வகையில் தொண்டர்களுக்குக் குளிர்ந்த தண்ணீர் பாட்டில்கள், குளிர்ந்த நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர், வாக்காளர்களைக் கவருவதற்காக தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் எப்படியாவது அனைத்துத் தொகுதிகளிலும் பிரசாரத்தை முடுக்கிவிடுவது அவர்களது நோக்கமாக உள்ளது. ஆனாலும், அதிகரித்து வரும் வெயில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்துக்குச் சவாலாகவே உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பாஜகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்தவும், அவர்களின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தவும், எங்கள் தலைவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே நாங்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று திமுகவின் உதயநிதி ஸ்டாலினுடன் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற காத்தவராயன் என்பவர் தெரிவித்தார்.

தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பிற்பகலுக்குப் பின் தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.

கடந்த 2019 பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள்) மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 தொடங்கி ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஏறக்குறைய 97 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in