சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி!

நூறு சதவீத தீக்காயத்துடன் ஒரு பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து - கோப்புப்படம்
பட்டாசு ஆலை வெடிவிபத்து - கோப்புப்படம்ANI
1 min read

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஏப்.26) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர், 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வருகிறது. உரிய அனுமதி பெற்று உரிமத்துடன் இயங்கும் இந்த ஆலையில், பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆலையில் இன்று (ஏப்.26) காலை வெடிமருந்துகளைத் தயார் செய்தபோது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 2 அறைகள் சேதமடைந்தது, அங்கு பணியாற்றி வந்த 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர், 7 பேர் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்தவும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிவகாசி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மூன்று பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அத்துடன், காயமடைந்த 7 பேரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண் நூறு சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்பிறகு சம்பவ இடத்திற்கு சென்று சார் ஆட்சியர் பிரியா மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த விபத்து தொடர்பாக எம். புதுப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in