சிவகாசி வெடிவிபத்து
சிவகாசி வெடிவிபத்து@ani

சிவகாசி வெடிவிபத்து: முதல்வர், ஆளுநர், குடியரசுத் தலைவர் இரங்கல்

"வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்".
Published on

சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்பட பலரும் இதற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் கூறியதாவது: “சிவகாசி அருகிலுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த தொழிலாளர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” என்றார்.

ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதாவது: “விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியதாவது: “சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in