சகோதரி வைஷ்ணவி பாஜகவிற்கு வரலாம்: வானதி சீனிவாசன் அழைப்பு!

சகோதரி வைஷ்ணவி பாஜகவிற்கு வரலாம்: வானதி சீனிவாசன் அழைப்பு!

மாநில அளவில் கட்சிக்காக உழைக்கும் எனக்கு பொதுக்குழு கூட்டம், பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம் என எதற்கும் அனுமதி கொடுக்காமல் நிராகரித்தனர்.
Published on

தவெகவில் இருந்து விலகியுள்ள சமூக ஆர்வலரான வைஷ்ணவி, உண்மையிலேயே மக்கள் பணியாற்ற வேண்டுமென்று நினைத்தால் எங்கள் கட்சிக்கு வரலாம் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கியதும் சமூக ஆர்வலரும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான வைஷ்ணவி அக்கட்சியில் இணைந்தார். ஊடகங்களில் வெளியான அவரது பேட்டிகள் மூலம் குறுகிய காலத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் தவெகவில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு, நேற்று அவர் அறிக்கை வெளியிட்டார். அறிக்கையில் அவர் கூறியதாவது,

`என் மனதை கல்லாக்கிக்கொண்டு இந்த கடிதத்தை எழுதுகிறேன். குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், இந்த சமூகத்தில் மாற்றம் ஒன்று மலராதா என்றே எனது அரசியல் பயணத்தை தவெகவில் தொடங்கினேன். ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து, கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து, கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள். கட்சியில் இருக்கும் சில நாசக்காரர்களின் சதியாலும் உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் எனது வார்டில் இருக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்கக்கூட எனக்கு அனுமதி கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டேன்.

மாநில அளவில் கட்சிக்காக உழைக்கும் எனக்கு பொதுக்குழு கூட்டம், பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம் என எதற்கும் அனுமதி கொடுக்காமல் நிராகரித்தனர். கட்சியின் வளர்ச்சிக்காக என்னை சுதந்திரமாக மக்களைச் சந்திக்கவிடுங்கள் என்று மட்டும்தான் கோரிக்கை வைத்தேன் ஆனால் அதற்கும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.

என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்று புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பேன். இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

இந்நிலையில், வானதி சீனிவாசன் இன்று (மே 4) செய்தியாளர்களைச் சந்தித்தார். தவெகவில் இருந்து வைஷ்ணவி விலகியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

`வழக்கமாகவே அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு அல்லது பெண்களுக்கு மிக சுலபமாக அவர்கள் குடும்பத்திலும், சமுதாயத்திலும் ஆதரவு கிடைத்துவிடாது. மருத்துவராகவும், பொறியாளராகவும் குழந்தைகள் விருப்பம் தெரிவிக்கும்போது மகிழ்ச்சியடையும் பெற்றோர், அதே குழந்தைகள் அரசியலுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தால் ஆதரவு வழங்குவதில்லை.

ஆனால், இதையெல்லாம் தாண்டி அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடம் என்ற உறுதி இருந்தால் எத்தகைய தடைகளையும் நம்மால் தாண்ட முடியும். அதனால் ஒரு வேளை சகோதரி உண்மையாகவே மக்களுக்குப் பணியாற்றுவதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்தால் எங்கள் கட்சிக்கு தாராளமாக அவர் வரலாம்.

இங்கு அனைத்து வாய்ப்புகளும், அனைவருக்கும் வழங்கப்படுகிறது. அதிகமாக இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் பிரதமர் மோடி சொல்கிறார். லட்சணக்கான இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.

அரசியல் ஆர்வத்தை நிறைவேற்ற விரும்பும் சகோதரிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் ஒரே கட்சியாக பாஜக உள்ளது’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in