
ஒரே அட்டையை உபயோகித்துச் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் திட்டம் இம்மாதம் முதல் அமலாகவிருப்பதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேருந்துகளை இயக்கிவருகிறது தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான மாநகரப் போக்குவரத்துக் கழகம். இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு,
`கடந்த (2024) ஆண்டில், 242 பி.எஸ்-6 ரக பேருந்துகளும், 502 தாழ்தள சொகுசுப் பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ஏசி பேருந்துகளை அதிகப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 320 ஏசி பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
வரவுக்கும், செலவுக்கும் இடையேயான வித்தியாசத் தொகை ரூ. 300 கோடியாகும். பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட 1,559 பேருந்துகளின் எண்ணிக்கை 1,655 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்னணு பயணச்சீட்டு கருவி வாயிலாக 99.9 சதவீத பயணச்சீட்டுகள் விநியோகப்படுகின்றன.
1.3 சதவீத பயணிகள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டைப் பெறுகின்றனர். மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் என்.சி.எம்.சி. அட்டை மூலம் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் பயணச்சீட்டு பெறும் திட்டம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
செயலி வாயிலாகப் பயணச்சீட்டுகளைப் பெறும் திட்டத்தை நடப்பாண்டின் மத்தியில் இருந்து செயல்படுத்த இருக்கிறோம். சராசரியாக நாளொன்றுக்கு 32.19 லட்சம் பயணிகள் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். கட்டணமில்லா பயணத்திட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10.28 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர்’.