
சாவா படம் வெளியான பிறகு, முகலாயப் பேரரசர் அவுரங்கஸிப்பின் சமாதியை அகற்றக்கோரி மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஹிந்து அமைப்பினரிடையே கோரிக்கை வலுத்துள்ள நிலையில், அதற்கான தேவை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
கடந்த சில வாரங்களாக இரு சர்ச்சைகள் மஹாராஷ்டிர மாநிலத்தைச் சுழன்றடிக்கின்றன. முதலாவதாக, சம்பாஜி நகர் மாவட்டத்தின் குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாயப் பேரரசர் அவுரங்கஸிப்பின் சமாதியை அகற்றக்கோரி போராட்டம் நடந்து வரும் விவகாரம். இரண்டாவதாக துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா பகடி செய்த விவகாரம்.
விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் மராட்டிய மன்னர் சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து உருவான `சாவா’ படம் கடந்த பிப்ரவரி 14-ல் வெளியானது. மராட்டிய மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், வரலாற்று ரீதியாக இப்படத்தின் திரைக்கதையில் பல்வேறு பிழைகள் உள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
முகலாயப் பேரரசர் அவுரங்கஸிப்பின் உத்தரவின்போரில் சித்ரவதை செய்யப்பட்டு மன்னர் சம்பாஜி கொல்லப்பட்ட விவகாரத்தை முன்வைத்துப் போராட்டத்தில் இறங்கிய ஹிந்து அமைப்புகள், குல்தாபாதில் உள்ள அவுரங்கஸிப் சமாதியை அகற்ற கோரிக்கை விடுத்தன. இதனால் அம்மாநிலத்தின் நாக்பூர் நகரில் கலவரம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தலித் தலைவரும், மத்திய இணையமைச்சரும், பாஜக கூட்டணியைச் சேர்ந்த இந்திய ரிபப்ளிகன் கட்சியின் (அ) தலைவரும் ராம்தாஸ் அத்வாலே இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
`அவுரங்கஸிப் 1707-ல் உயிரிழந்தார். அவரது சமாதியை அகற்ற கடந்த 300 வருடங்களில் கோரிக்கை எழவில்லை. சாவா திரைப்படத்தைப் பார்த்த பிறகே இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் நான் அங்கம் வகிக்கிறேன். அவுரங்கஸிப்பின் சமாதியை அகற்றுவதால் எதுவும் நடந்துவிடாது. அதை அகற்றக்கூடாது.
ஹிந்துக்கள் அத்தகைய கோரிக்கையை வைக்கக்கூடாது. இஸ்லாமியர்கள் தங்களுடன் அவுரங்கஸிப்பை இணைத்துப் பார்க்கக்கூடாது. மோடி அரசின் திட்டங்களால் இஸ்லாமியர்களுக்குப் பலன் கிடைக்கிறது. ஹிந்து-இஸ்லாமியர்களுக்கு இடையிலான பிரிவினைவாதம் நாட்டிற்கு நல்லதல்ல. வளர்ச்சி மீது மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம்’ என்றார்.