சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடந்த மகாவிஷ்ணு என்பவரின் சர்ச்சைக்குரிய சொற்பொழிவை அடுத்து அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் திருவள்ளூர் மாவட்டத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அந்தத் தலைமையாசிரியரை சென்னையிலேயே பணியமர்த்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த் மாயவன், `அந்தப் பேச்சாளர் நல்ல நோக்கத்துக்காகத்தான் அழைக்கப்பட்டார். அவரை வேண்டுமென்றே இந்தப் பள்ளியில் அனுமதிக்கவில்லை. பள்ளியின் மேலாண்மைக் குழுவின் பரிந்துரையின் பெயரில்தான் அவர் அழைக்கப்பட்டுள்ளார். எனவே திருவள்ளூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தலைமையாசிரியரை சென்னையில் பணியமர்த்தவேண்டும்.
இவ்வாறு நடந்ததுக்கு அந்தத் தலைமை ஆசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே இதைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மனதில்கொண்டு அந்தப் பள்ளியின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட அந்தத் தலைமை ஆசிரியருக்குக் கடுமையான தண்டனை எதுவும் அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.
இன்று காலை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக பள்ளிக்கல்வித்துறையால் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும், மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சி நடந்த மற்றொரு பள்ளியான சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக பள்ளிக்கல்வித்துறையால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.