
இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பான விண்ணப்பத்தின் மீது ஓ. பன்னீர்செல்வம் தரப்பின் கருத்துகளை கேட்டுவிட்டு முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பிரச்னையால் அக்கட்சியின் பல்வேறு சட்டவிதிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவை முடியும் வரை அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் கடந்த பிப்ரவரியில் விண்ணப்பம் அளித்தார்.
இந்த விண்ணப்பம் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சூரியமூர்த்தி. இதனை தொடர்ந்து கடந்த நவ.25-ல் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சி. குமரப்பன் ஆகியோரைக் கொண்ட அமர்வுக்கு முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அன்றைய தினம் தேர்தல் ஆணையத்துக்குப் பல்வேறு கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், அதன்பிறகு வழக்கு விசாரணையை டிச.4-க்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரட்டை இலை சின்னம் தொடர்பான விண்ணப்பத்தில் முடிவெடுப்பதற்கு முன்பு எங்கள் தரப்பு கருத்துகளை கேட்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுவிட்டு, 4 வார காலத்திற்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பான விண்ணப்பத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள்.