இளைஞர்களுக்கு வழிவிட்டாக வேண்டும்: துரைமுருகன்

"கொள்கையை விடாமல் பிடித்திருக்க வேண்டும்."
அமைச்சர் துரைமுருகன் (கோப்புப்படம்)
அமைச்சர் துரைமுருகன் (கோப்புப்படம்)ANI
2 min read

அரசியலில் இளைஞர்களுக்கு வழிவிட்டாக வேண்டும் என திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், இளைஞர்களுக்கு வழிவிடுவது குறித்து பேசினார்.

"அரசியலில் சந்தர்ப்பங்கள் சில நேரங்களில் வெறுப்பைக் கொடுக்கும். அவமானம் ஏற்படும். தோல்வி வரும். நான் எதிர்கொள்ளாத அவமானமா? நான் பார்க்காத தோல்வியா? நான் சந்திக்காத எதிர்ப்புகளா?

ஆனால் அவை வரும்போதெல்லாம், அவமானங்களுக்காகவும் தோல்விக்காகவும், எதிர்ப்புகளுக்காகவும் நான் திமுகவில் இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டும். திமுகதான் என்ற எண்ணம் இருந்தால், இவை அனைத்தும் பறந்துவிடும். எனவே தான் சொல்கிறேன், இயக்கத்தில் பிடிப்பு வேண்டும்.

இளைஞர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அதை நான் வரவேற்கிறேன். நாங்கள் இளைஞர்களாகதான் வந்தோம். நாங்கள் அப்போது மாணவர் திமுகவில் இருந்தோம். உங்களைத் தகுந்த நேரத்தில் கட்சிக்குள் மாற்றுகிறேன் என்று சொன்னவர் அண்ணா. எனவே, கொள்கையை விடாமல் பிடித்திருக்க வேண்டும். பதவி கொடுப்பார்களா என்று காத்திருக்கக் கூடாது.

சில நேரங்களில் கொள்கைகளில் வெறுப்பு ஏற்பட்டு மாறுவதுண்டு. மாறிய பிறகு உறுதியாக இருக்க வேண்டும். ஆகையினால் சொல்கிறேன். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இளைஞர்கள் இல்லாவிட்டால், இந்தக் கட்சி ஒரு கட்டத்தில் முடிவை எட்டிவிடும். எனவே, இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். ஆனால், வருகிற இளைஞர்கள் கொஞ்சம் தடம் பார்த்து வாருங்கள். கட்சியை நினைத்து வாருங்கள். வந்தவுடனே எனக்கு இந்தப் பதவி கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. உங்களைவிட உழைத்தவர்கள், அடிபட்டவர்கள், உதைபட்டவர்கள், மனைவி பிள்ளைகளிடம் கெட்ட பெயர் வாங்கியவர்கள் நிறையே பேர் உள்ளார்கள். அவர்களும் இந்தக் கட்சியில் தியாகம் செய்திருக்கிறார்கள்.

எனவே தான் இளைஞர்களுக்கு நாம் வழிவிட்டாக வேண்டும். இந்த நிலைமையை நாம் நினைத்தால்தான், ஓர் இயக்கத்தில் நிலைத்திருக்க முடியும்" என்றார் துரைமுருகன்.

அண்மையில் கடந்த ஆகஸ்ட் 24 அன்று அமைச்சர் எ.வ. வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது நகைச்சுவையாகப் பேசிய அவர், திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களைக் குறிப்பிட்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியை சிறிய வயதிலிருந்து பார்த்து வளர்ந்தவர்களைச் சமாளிப்பது சாராதண காரியம் அல்ல என்று கூறி முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டினார். மேலும், துரைமுருகனைப் பிரத்யேகமாகக் குறிப்பிட்டு கலைஞர் கண்களிலேயே விரலைவிட்டு ஆட்டியவர் என்று பேசினார். இது அரங்கில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பின்னர் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், சினிமாவிலும் மூத்த நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதாகப் பேசினார்.

பிறகு, எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் துரைமுருகன் பேசினார். திமுகவில் ஏற்கெனவே இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற கருத்து நிலவி வருவதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்த நிலையில், ரஜினி - துரைமுருகன் சம்பவம் கவனம் பெற்றது.

இதன் தொடர்ச்சியாகவே இளைஞர்களுக்கு வழிவிட்டாக வேண்டும் என துரைமுருகன் நேற்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in