
Velpaari Su Venkatesan Rajinikant Shankar: மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் எழுதிய `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் ஒரு லட்சமாவது பிரதி விற்றதைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், வேள்பாரி பட அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சங்ககால தமிழ் நில ஆட்சியாளர்களில் மிக முக்கியமானவர் பாரி. பறம்பு மலை என்கிற குறுநில பகுதியை ஆட்சி செய்த பாரி, வேளீர் குலத்தின் தலைவனாக இருந்ததால் வேள்பாரி என்று அழைக்கப்பட்டார். சங்ககால கடை ஏழு வள்ளல்களில், பிற அனைவரையும்விட பாரி சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர் என்று பல புலவர்கள் அவரைப் போற்றிப் பாடியுள்ளனர்.
சாகித்ய அகாடமி விருதை வென்ற எழுத்தாளரும், மதுரை எம்.பி.யுமான சு. வெங்கடேசன் பாரியின் வாழ்க்கை வரலாற்றை புனைவுக் கதையாக ஆனந்த விகடன் இதழில், `வீரயுக நாயகன் வேள்பாரி’ என்ற பெயரில் 111 அத்தியாயங்களைக்கொண்ட தொடராக எழுதினார்.
2016-2018 ஆண்டுகளில் வெளியான இந்த தொடர், தமிழ் வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த தொடர் நிறைவடைந்த பிறகு, 2 பாகங்களைக்கொண்ட புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிட்டது.
இந்நிலையில், `வீரயுக நாயகன் வேள்பாரி’ நூல் ஒரு லட்சமாவது பிரதி விற்றதைக் கொண்டாடுவதற்காக நாளை (ஜூலை 11) மாலை 5.30 அளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கோபிநாத் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
வேள்பாரி நாவலைப் படமாக்கும் வேலைகளில் இயக்குநர் ஷங்கர் ஈடுபட்டு வருவதாக உறுதிபடுத்தப்படாத தகவல் முன்பு வெளியானது. தற்போது வேள்பாரி நூலின் வெற்றி விழாவில் ஷங்கர் கலந்துகொள்ளவுள்ளதால், வேள்பாரி பட அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.