
சென்னையில் நேற்றிரவு 10 மணி முதல் 11 மணி வரை தீவிரமான மேகவெடிப்பு மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. 2025-ம் ஆண்டின் முதல் மேகவெடிப்பு மழையாக இது கருதப்படுகிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.
அதிகபட்ச மழையாக மணலியில் 27 செ.மீ., விம்கோ நகரில் 23 செ.மீ., கொரட்டூரில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் 4 விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. 15 விமானங்கள் தாமதமாகக் கிளம்பின.
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், நீர் வரத்து விநாடிக்கு 250 கன அடியில் இருந்து 475 கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 1.075 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, திருப்பூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, நெல்லை, குமரி, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.