
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும்போது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், வாரம்தோறும் சனிக்கிழமைகளில் வெவ்வேறு ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக திருச்சியில் பரப்புரை மேற்கொண்டார். அதற்குக் காவல்துறை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இந்நிலையில், பிரசாரத்திற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களைப் பாரபட்சம் இன்றி பரிசீலித்து அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு இன்று (செப். 18) விசாரணைக்கு வந்தது. அப்போது, ”மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படாத, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் எங்களுக்கு விதிக்கப்படுகின்றன. எந்த வழியாக சென்னைக்குள் வர வேண்டும், திரும்ப வேண்டும் என்று கூட நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் கூட்டத்திற்கு வரக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. அவர்களை வர வேண்டாம் என்று நாங்கள் எப்படிச் சொல்ல முடியும்” என்று தவெக தரப்பில் வாதாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, காவல்துறை தரப்பில் திருச்சி சுற்றுப்பயணத்தின்போது தவெக தொண்டர்களின் செயல்களைப் படங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ”இதுபோன்ற நிபந்தனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் விதிக்கப்படுவது தானே. முழுமையாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதா? சட்டத்திற்கு உட்பட்டே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சேதப்படுத்தப்பட்டபோது சொத்துகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டதா? இல்லையென்றால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரும்” என்று தவெக தரப்புக்கு எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், “திருச்சியில் உயரமான இடங்களில் ஏறி நின்ற தவெக தொண்டர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? இதனை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா? அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுக்கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடாகக் குறிப்பிட்ட தொகையை முன்பணமாகச் செலுத்தும் வகையிலும் விதிமுறைகள் அமைய வேண்டும்” என்று காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
மேலும், விதிமுறைகள் வகுப்பது குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.