
கரூரில் விஜய்க்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் இல்லை. கட்டுப்பாடற்ற கூட்டம். மணிப்பூருக்குச் செல்லாத உண்மை கண்டறியும் குழு கரூருக்கு மட்டும் வந்தது ஏன்? என்று கரூர் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஒரு நபர் ஆணையமாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டு, விசாரித்து வருகிறார். காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சரும் கரூர் எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-
”கடந்த 3 நாள்களாக கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் வீடுகளுக்குச் சென்று இரங்கல் தெரிவித்து வந்தோம். பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு வேண்டியதைச் செய்து வந்தோம். இதில் கவனம் செலுத்தியதால்தான் இப்போது செய்தியாளர்களைச் சந்திக்க முடிந்தது. இந்தப் பெரும் துயரச் சம்பவம் நிகழ்ந்த அன்றே கரூருக்கு வந்து மக்களைச் சந்தித்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி. மேலும், மக்களுக்கு உதவியாக இருந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கரூர் மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இது யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத துயரச் சம்பவம். எனது 50 வயதில், 29 கால பொதுவாழ்வில் இதுவரை நடந்திராத ஒன்று. இனி வரும் நாள்களில் இதுபோல் ஒரு சம்பவம் தமிழகத்தில் எங்கும் நடக்கக் கூடாது. கூட்ட நெரிசலில் 116 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில், 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்கள். தற்போது 5 பேர் கரூர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
கட்சி, இயக்கம் என்று பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவினார்கள். என்னைப் பொறுத்தளவில் உயிரிழந்தவர்களில் 31 பேர் கரூரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருடனும் நான் நேரடியாகத் தொடர்பில் உள்ளவன். இதை அரசியல் நிகழ்வாக மாற்றாமல், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டாமல் மனிதாபிமான அடிப்படையில் இதுபோல் ஒரு சம்பவம் நடக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விஜய் தரப்பில் பரப்புரைக்குக் கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானா கேட்கப்பட்டது. உழவர் சந்தை பகுதி கேட்கப்பட்டது. அப்பகுதிகளில் அனுமதி கொடுக்கப்படிருந்தால் மாநகரம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கும். அதனால்தான் வேலுச்சாமிபுரம் கொடுக்கப்பட்டது. இப்பகுதிகளில் எவ்வளவு மக்கள் நிற்க முடியும் என்பதை நீங்களே பார்த்துச் சொல்லுங்கள். தங்களுக்கு வர வேண்டிய கூட்டத்தைப் பொறுத்து இடத்தைத் தேர்வு செய்ய வேண்டியது ஒவ்வொரு அரசியல் கட்சியின் கடமை.
வேலுச்சாமிபுரத்தில் 2000 செருப்புகள் இருந்தன. ஆனால், காலியான தண்ணீர் பாட்டில் ஏதாவது இருந்ததா? வந்தவர்களுக்கு குடிநீர் ஏற்பாடோ, உணவு ஏற்பாடோ செய்யப்படவில்லை என்பதே மக்களின் கருத்து. 12 மணிக்கு நடக்க வேண்டிய கூட்டம். 4 மணிக்கு அவ்விடத்தில் 5000 பேர் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். குறித்த நேரத்தில் கூட்டம் நடந்திருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது என்று மக்கள் கருதுகிறார்கள்.
பரப்புரை வாகனத்தின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த விஜய், திடீரென உள்ளே சென்றது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஜெனரேட்டர் அறைக்குள் தவெகவினர் நுழைந்ததால்தான் மின் விநியோகம் தடைப்பட்டது. அப்போதும் தெரு விளக்குகள் எரிந்துகொண்டுதான் இருந்தன. கீழிருந்து மக்கள் தண்ணீர் கேட்ட பின்னர்தான் விஜய் தரப்பிலிருந்து தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்டன.
கூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனத்தை முன்னே நிறுத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனாலும் தவெகவினர் கேட்கவில்லை. காவல்துறை கூறிய எதையும் தவெகவினர் மதிக்கவில்லை. கரூர் மட்டுமல்ல விஜயின் அனைத்துக் கூட்டங்களிலும் பாதிப்புகள் இருந்தன. விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளிலும் கூட தொண்டர்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டன.
விஜய் பேசத் தொடங்கி 6-வது நிமிடத்திலேயே செருப்பு வீசப்பட்டுவிட்டது. கீழே இருந்து உதவி கேட்டவர்கள் விஜயின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் செருப்பை வீசியிருக்கலாம். என்னைப் பற்றி விஜய் பேசத் தொடங்கியது 19-வது நிமிடத்திற்கு மேல்தான். சமூக ஊடகங்களில் தவறாக கருத்து பரப்புகிறார்கள். நடந்த சம்பவத்திற்கு யார் மீதாவது குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்பதற்காக என் மீது அவதூறு பரப்புகிறார்கள். இது அரசியல் செய்ய வேண்டிய விஷயம் இல்லை.
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தவெகவினர் ஏன் இதுவரை முன்வரவில்லை? விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த நான் தகவல் கேள்விப்பட்டதும், இரவு 7:47-க்கே அமராவதி அரசு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன்.
விஜய்க்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் இல்லை. கட்டுப்பாடற்ற கூட்டம். அதே இடத்தில் அதிமுக கூட்டம் நடந்தபோது 15,000 பேர் வந்தார்கள். தவெகவுக்கு 25,000 பேர் வந்தார்கள். கூடுதலாக 10,000 பேரைத் தாங்க முடியாத அளவுக்கான இடம் அது கிடையாது. ஆனால் தொண்டர்களைக் கட்சியினர் கட்டுப்படுத்த தவறிவிட்டனர்.
பாஜகவின் உண்மை கண்டறியும் குழு மணிப்பூருக்கும் சென்றிருக்கலாம், கும்பமேளாவுக்குச் சென்றிருக்கலாம், கரூருக்கு மட்டும் வந்தது எதற்காக? அதிமுக ஆட்சி காலத்தில் 8,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின. ரூ.14 கோடிக்கு மேலான அபராத தொகை வசூலிக்கப்பட்டது. அதனால் எடப்பாடி பழனிசாமியை பத்து ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா?
ஏன் தாமதமாக வந்தீர்கள்? ஏன் விளக்கை அணைத்துக்கொண்டு வாகனத்திற்குள் சென்றீர்கள்? ஏன் மக்களைப் பார்த்துக் கையசைக்காமல் இருந்தீர்கள்? ஏன் கூட்ட நெரிசலுக்குள் கட்டாயப்படுத்தி வாகனத்தை உள்ளே நுழைத்தீர்கள் என்று விஜயிடம் கேளுங்கள். ”
என்று பேசினார்.