மண்ணை அள்ளி விற்பது, மலையைக் குடைந்து விற்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்றவை எல்லாம் தியாகமாகக் கருதப்படுகிறது, செந்தில் பாலாஜி செய்தது தியாகமா என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் பேசியவை பின்வருமாறு:
`நம் நாட்டில் எது பரபரப்பு இல்லை? லட்டு பரபரப்பு, பஞ்சாமிர்தம் பரபரப்பு, பிணை கிடைப்பதில் பரபரப்பு. பரபரப்புக்கு பஞ்சம் இருக்கிறதா என்ன?. திருடுவது, கமிஷன் வாக்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பது, நேரம் கடந்து டாஸ்மாக்கில் மது விற்பனை செய்வது, கள்ளச்சாராயத்தை விற்பது போன்றவை தியாகத்தில் வருகிறது.
செந்தில் பாலாஜி செய்தது தியாகமா? பின் செக்கிழுத்து, 8-9 வருடங்கள் சிறையில் இருந்த என் பாட்டன்கள் செய்ததற்கு பெயர் என்ன? இந்த நாட்டில் மண்ணை அள்ளி விற்பது, மலையைக் குடைந்து விற்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்றவை எல்லாம் தியாகமாகக் கருதப்படுகிறது.
இந்த வழக்கை திமுக தொடர்ந்தது. அதிமுக ஆட்சியின்போது திமுக தொடர்ந்த வழக்கில்தான் அவர் சிறைக்குச் சென்றார். உங்கள் கட்சியில் இருந்தால் அது வீர தீர தியாகமாகிறது, வேறு கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டு ஆகிவிடுகிறது. இவர் கெட்ட கேட்டிற்கு இவரும் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறார், இந்த செந்தில் பாலாஜி செய்த ஊழல் தெரியுமா என்று கரூரில் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
அவர் திமுகவில் சேர்ந்தபோது உங்களை போன்ற ஒருவருக்காகத் தான் காத்திருந்தோம். அங்கே மேற்கொண்ட திருட்டை இங்கே மேற்கொள்ளுங்கள் என்கிறார்கள். அடுத்து அவரை அமைச்சராக்கப் போகிறார்கள். யார் அதிகமாக கப்பம் வசூலித்துக்கொடுக்கிறார்களோ அவர் நல்ல அமைச்சராகிறார் அவ்வளவுதான்’ என்றார்.