சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து புழல் சிறையில் இருந்து வெளிவந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
471 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு, புழல் சிறைக்கு வெளியில் திரண்டிருந்த திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசில், 2011 முதல் 2015 வரை போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. அப்போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று, அதை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் கூறி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தது அமலாக்கத்துறை.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் கீழ் கடந்த வருடம் ஜூன் 14-ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. இதனை அடுத்து இந்த வழக்கில் ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை ஏற்று இன்று (செப்.26) செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
இதை அடுத்து இரவு 7.15 மணி அளவில் சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.