டங்ஸ்டன் சுரங்க உரிமை: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவை முன்னவர் துரைமுருகன், முதல்வர் மு.க. ஸ்டாலின் இடையே கடும் வாதம் நடைபெற்றது.
டங்ஸ்டன் சுரங்க உரிமை: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்
1 min read

டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கான உரிமையை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை கூடியது. சட்டப்பேரவையின் இரு கூட்டத்தொடர்களுக்கு ஆறு மாதங்கள் கால இடைவெளி இருக்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 29 வரை நடைபெற்றது.

இதன் அடிப்படையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றும் நாளையும் இரு நாள்களுக்கு நடைபெறுகிறது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடியவுடன் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மறைந்த அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றன.

இவற்றின் தொடர்ச்சியாக, மதுரையில் ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கான உரிமையை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

தீர்மானம் மீது சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசு அலட்சியமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோர் பதிலளித்தார்.

சுரங்க உரிமை குறித்த அறிவிப்பு வெளியானபோதே நடவடிக்கை எடுத்திருந்தால், இதை முன்கூட்டியே தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்றும் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துப் பேசினார்.

சுரங்க உரிமைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், குத்தகை விடுவதற்கான அதிகாரம் முதல்வர் வசம் மட்டுமே இருப்பதாக துரைமுருகன் விளக்கம் கொடுத்தார்.

தான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு அனுமதி வழங்கப்படாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.

பெரும் வாதத்துக்குப் பிறகு, இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேறியவுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். செவ்வாய்க்கிழமை காலை சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.

மூன்றாவது இருக்கையில் உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது, அவருக்கு முதல் வரிசையில் 13-வது இருக்கை வழங்கப்பட்டிருந்தது. துணை முதல்வரானதையடுத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாத உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in