
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன்.
அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டம் அன்னூரில் கடந்த பிப்.9-ல் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார் அதிமுக மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கே.ஏ. செங்கோட்டையன்.
இந்த பாராட்டு விழாவின் அழைப்பிதழிலும், மேடையிலும் அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாததால், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்றும், விழாவை புறக்கணிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார் செங்கோட்டையன்.
இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் வீட்டிற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பிப்.12-ல் குவிந்தார்கள். ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருப்பதாக செய்தி வெளியான நிலையில், தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வருவதும், என்னை சந்தித்து பேசுவதும் வழக்கம் என்று பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் செங்கோட்டையன்.
செங்கோட்டையன் கட்சிக்கு எதிராக நடந்துகொள்ளமாட்டார் என்று அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி, ஓ.எஸ். மணியன் உள்ளிடோர் கருத்து தெரிவித்தார்கள்.
இந்நிலையில், மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA Committee) கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று (பிப்.15) நடைபெற்று வருகிறது. இதில் குழு உறுப்பினராக செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.