
என்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகியவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (செப். 5) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விடுத்திருந்தார். இதையடுத்து, அவரைக் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கி இன்று (செப்.6) எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் இதுகுறித்து செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது - அதிமுக பெரும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் என் கருத்துகளை வெளியிட்டேன். ஜனநாயகம் என்பது விளக்கம் கேட்பதுதான். ஆனால் நான் கெடு விடுத்தது பற்றி என்னிடம் விளக்கம் ஏதும் கேட்கவில்லை. விளக்கம் கேட்காமலேயே என்னைக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டார்கள். கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குவார்கள் என நான் எதிர்பார்க்கவில்ல. என் மீதான நடவடிக்கைக்குக் காலம் பதில் சொல்லும். அதிமுகவை ஒருங்கிணைக்கும் எனது பணி தொடரும். நான் கட்சி நலனுக்காகவே பேசினேன். என் நலனுக்காக அல்ல. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்தை யார்தான் வெளிப்படுத்துவது? எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் நான் அதை வெளிப்படுத்தினால் சரியாக இருக்கும் என்றே நான் சொன்னேன்” என்று கூறினார்.
KA Sengottaiyan | ADMK | AIADMK | Edappadi Palaniswami