
சென்னை வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த 5 பேருடைய குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"ஒன்றிய அரசின் விமானப் படை வான் சாகச நிகழ்ச்சிகளை நடத்தியது. லிம்கா சாதனையில் பதிவு பெறுவதற்கு இந்திய விமானப் படை அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. 15 லட்சம் மக்கள் கூடும் அளவுக்கு, அங்கே தங்களுடைய வீர சாகசங்களைக் காட்டியிருக்கிறது.
இதில் 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட பொது நிகழ்ச்சியில் மரணம், துயரங்கள் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் எங்களுடைய வேண்டுகோள். இதுவொரு படிப்பினை.
இந்திய விமானப் படை கடந்த காலங்களில் இந்த சாகச நிகழ்ச்சிகளை மாலை நேரத்தில் நடத்தியது. எதற்காக தற்போது காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை உச்சி வெயிலில் மக்களைத் திரட்டி சாகச நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்?
உயிரிழந்தவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைத்து தவறு எங்கே நேர்ந்தது என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது முதற்கட்ட உயிரிழந்த 5 பேருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் அறிவிக்கிறேன். இவர்களுடையக் குழந்தைகளின் கல்விச் செலவை எங்களுடைய அறக்கட்டளை ஏற்கும்" என்றார்.